loader
நாம்

நாஞ்சில் மலர் இதழ்

நாஞ்சில் மலர் - நாம்

இந்த nanchilmalar.com வாயிலாகச் சில செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். நாஞ்சில் மலர் மாத இதழ் தொடங்குவதற்கு முன்பாகவே மூன்று நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். சிறு வயதிலேயே என் பள்ளி நாட்களில், எங்கள் தேரூரில் அமைந்துள்ள கவிமணி நினைவு நூலகத்தில் இருந்த அனேகம் புத்தகங்களை வாசித்துள்ளேன். இந்த வாசிப்புகளின் அடிப்படையிலேயே எனது எழுத வேண்டும் என்ற அவா கங்காகி என்னுள் கனன்று கொண்டிருந்ததை அறிந்தேன். அதன் அடிப்படையே அந்த மூன்று நூல்களின் வெளிப்பாடு. மேலும் இந்த மாத இதழ் தொடங்க வேண்டும் என முதலில் எனக்கு தூண்டு கோலாக இருந்த சமுதாயப் பெரியவர்கள் பொறியாளர் ஆ. முருகையாபிள்ளை, அவரது தமையனார் முனைவர் மு.ஆறுமுகம் மற்றும் முனைவர் பி. யோகீஸ்வரன் ஆகியோரது ஆசியோடும் ஆதரவோடும் இந்த மாத இதழ் இதழ் தொடங்க வேண்டிய நடவடிக்கைகளான மத்திய அரசு பத்திரிகை பதிவாளரிடம் தலைப்புப் பதிதல், அதற்குண்டான பதிவு எண் போன்ற வேலைகள், பத்திரிகை தொடங்கி அவற்றை, பல்வேறு முகவரிகளுக்கு சலுகை தபால் செலவில் அனுப்ப தமிழ்நாடு தபால் துறையில் அனுமதி அனைத்தையும் பெற்று எந்த ஆரவாரமும் இல்லாமல் 2010 முதல் இதழ் வெளியிடப் பெற்றது. இந்த நடவடிக்கைகளுக்கொல்லாம் முழு ஆதரவு அளித்தவர் முனைவர் மு. ஆறுமுகம் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதுவுமன்றி முனைவர் ஏ.எஸ். பிள்ளை அவர்கள் அவ்வப்போது செய்து வந்த பேருதவிகளும், தற்போதும் அவரது துணைவியார் முனைவர் ஜெயஸ்ரீ பிள்ளை அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் முனைவர் ஏ. எஸ். பிள்ளை அவர்கள் புத்ரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் வைத்து, தொடர்ந்து நாஞ்சில் மலர் பற்றிய கலந்தாய்வுக் கூட்டத்தில் வழக்கறிஞர் எஸ். விஜயதரணி கலந்து கொண்டு, கறுப்பு வெள்ளைக் காகிதத்தில் அச்சிட்டாவது நாஞ்சில் மலர் தொடர்ந்து வெளிவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவருக்கும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். மேலும் சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவன் அரங்கத்தில் வைத்து நாஞ்சில் நாடன் சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக நடந்த பாராட்டு விழாவிற்கு முனைவர் மு. ஆறுமுகம், நம் அனைத்து அறிஞர் பெருமக்களையும் கோவை பல்கலைக்கழகத் துணை வேந்தர் அவர்களை அழைத்து வந்து பெருமைப் படுத்தியதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். இவ்வாறாக நாஞ்சில் மலர் பல்வேறு இடைஞ்சல்களைச் சந்தித்த போதும், தொய்வில்லாது இன்றளவும் வெளி வந்து 14 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போடுகிறது என்றால் அந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் மேற்குறிப்பிட்ட புரவலர்கள், அறிஞர் பெருமக்கள், வாசகர்கள் ஆகிய அனைவருமே! மேலும் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்களைச் சந்தித்த போது, "தம்பி, இந்தப் பத்திரிகை வெளியிடுவது சிரமமான காரியம். செலவு கையைக் கடிக்குமே"!என்றார். "இல்லை அய்யா, அது கழுத்தையே கடிக்கிறது" என்றேன். சிரித்துக் கொண்டார். ஒரு சமயம் தொழிலதிபர் காலஞ்சென்ற H.வசந்தகுமார் அவர்களை ஒரு விழாவிற்கு வர  வேண்டும் என அழைக்கச் சென்றிருந்தேன். அவரும், "அய்யா, தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். நான், "எங்கள் சமுதாயத்திற்காக ஒரு மாத இதழ் நடத்தி வருகிறேன்" என்றேன். அவர், "இது சொத்தை வித்து செய்கிற சமாச்சாரம் ஆச்சே, எப்படி சமாளிக்கிறீர்கள்" என்று கேட்டார். ஏன் இதையெல்லாம் இங்கு பதிவு செய்கிறேன் என்றால் நம் சமுதாய மக்கள் வெறும் 650 பேர்கள் தான் சந்தாதாரர்களாகச் சேர்ந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான். நமது நாஞ்சில் மலர் இதழுக்கு கேரளத் தமிழர்கள் அளித்து வரும் ஆதரவும், தகவல்களும் மகத்தானவை,பாராட்டுக்குரியவை. அதிலும் நாஞ்சில் நாடுப் பெண்மணிகள் அங்கு குடியேறியவர்கள் காட்டி வரும் ஆதரவும், செய்திகளும், கட்டுரைகளும், கதைகளும் மிகவும் பாராட்டுக்குரியன. ஆக நாஞ்சில் மலர் பதிநான்காவதுஆண்டுகளைக் கடந்து, பதினைந்தாவது ஆண்டில் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றியுடன்,



கி. தானப்பன்